lørdag 12. mai 2012
எமது விடுதலைப்பயணம்
ஒரு போராளியாக தலைவருடனும், அவர் எண்ணங்களுடனும் வாழ்ந்தவன், வாழ்ந்து வருபவபன் என்ற முறையில் தற்போதைய விடயங்கள் சில எனக்கு கவலை தருகின்றன.
அண்ணை போராட்டத்தை அமைதியாக்கி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கையளித்த போது போராட்டத்தை தொடர்ந்தும் உலக மயப்படுத்தி வலுச்சேர்ப்பீர்கள் என்றே எதிர்பார்த்தோம்.
முள்ளிவாய்க்கால் என்பது பேரவலம். இனப்படுகொலை. சிங்களம் சர்வதேச விதிகளை மீறிப் புரிந்த போர்குற்றங்கள். தமிழர் எம்மைப் பொறுத்தவரை ஆறாதவடு. எமது விடிவை நோக்கி எம்மை நாளும் உத்வேகம் கொள்ள வைக்கும் இயங்குசக்தி.
எமது நீண்ட விடுதலை வரலாற்றில் நாம் சந்தித்த இழப்புகள் நீங்கள் அறியாதவையல்ல. ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் அந்த இழப்பின் சுவடு இருக்கிறது. ஒவ்வொரு முறை நாம் விழுந்தபோது எழுந்திருக்கின்றோம். விழுவதல்ல வரலாறு எழுவதே வரலாறு என்பதை நன்கறிந்தவர்கள் நீங்கள்.
மரணத்தை அல்லது வீரமரணத்தை தழுவிய எமது உறவுகளுக்காக ஒரு கணம் தாழ்த்திய எமது தலைகளை மீண்டும் சிலிர்த்துக் கொண்டு செருக்களம் புகுபவர்கள் நாங்கள். அண்ணை தமிழர்களை துவண்டு போகின்ற ஒரு இனமாக வளர்க்கவில்லை. ஓர்மம் கொண்ட போராடுகின்ற இனமாகவே வளர்த்திருக்கின்றார். கரிகாலன் வழித்தோன்றல்கள் நாங்களா இவ்வாறு?
எமது விடுதலைப்பயணம் தேசிய விடுதலைக்கானது ஆனாலும் அந்த விடுதலையில் சமூக, பொருளாதார, சமத்துவ விடுதலையும் என்றும் அடங்கியிருந்தவை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். எமது அடையாளமான மொழியும், கலை, பண்பாடும் எவ்வாறு சிறந்து விளங்கின என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
தூய மொழிப் பயன்பாட்டினூடாக உலகத் தமிழினத்திற்கே முதன்மையாக திகழ்பவர்கள் ஈழத்தமிழர்கள் நாங்கள். அதனால் பெருமை கொண்டவர்களே எங்கள் மாவீரர்கள். மாவீரர் நாள், துயிலும் இல்லங்கள், துயர் பகிர்வோம், சந்தனப்பேழைகள், அக வணக்கம் என எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனப் பெருமை பெற்றவர்கள் நாங்கள். இன்றும் சிலர் தவறாக மாவீரர் தினம் என்கிறார்கள். தினம் தமிழ்ச் சொல்லே அல்லவே. எங்கிருந்து வந்தது தேசிய துக்க நாள். துக்கம் என்பது தமிழ் மொழிச் சொல்லே அல்ல என்பதைக் கூடப் புரியவில்லை என்றால் எங்கு தவறு நடக்கிறது.
உங்களுக்குள் நடைபெறும் குழுச்சண்டைகளும், பிளவுகளும் எமக்கு துயர் தருகிறது என்றால், தேசிய நிகழ்வுகளிலேயே பிற மொழிப்பயன்பாடு முதன்மைப்படுத்துவது மேலும் கவலை தருகின்றது, புறந்தள்ள வேண்டியது. மொழிப் பயன்பாடு குறித்து அதீத அக்கறை செலுத்திய தலைவர்; வழிவந்தவர்களாக துக்க நாள் பிரகடனம் செய்வார்கள்?
தவறுகள் இழைப்பது என்பது மனித இயல்பு. அதைத் திருத்திக் கொள்வதும் மனித இயல்பு. தவறுகளைத் திருத்துங்கள். இல்லையேல் ஒரு உயரிய போராட்டத்தை மலினப்படுத்தி சிதைத்து விடாதீர்கள். அது மக்களுக்கும், மாவீரர்களுக்கும் இளைக்கும் உச்சமான துரோகமாகவே அமையும். இதனை எதிரியே மறைமுகமாக எம்முள் திணிப்பதாக இருந்தால் அதனை எதிர்கொண்டு புறம்தள்ளி நகர்வது என்பது உங்கள் முன்னால் உள்ள வரலாற்றுப் பணியாகும்.
மண்ணையும், மக்களையும், தமிழையும் நேசிக்கும்
போராளி நகுலன்?