அனைத்துலகத் தமிழ் உறவுகளுக்கு,
2009 மே மாதத்தில் ஈழவிடுதலைப்போரின்போது நிகழ்ந்த அனர்த்தங்களையும், அழிவுகளையும் சித்தரிக்கும் நோக்கில் தமிழ்நாட்டில், தஞ்சாவூரில் ”முள்ளிவாய்க்கால் முற்றம்” என்னும் சிற்ப நினைவாலயம் அமைக்கப்பட்டுவருகின்றது.
பிரசித்திபெற்ற, தஞ்சைப் பெருங்கோவிலுக்கும், தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கும் அருகாமையில் மேற்படி நினைவாலயம் அமைப்புப்பெற்றுள்ளது. உலகத்தமிழர் பேரவையின் தலைவர் திரு. பழநெடுமாறன் அவர்களின் விடாமுயற்சியாலும், உலகத்தமிழ் ஆதரவாளர்களின் ஊக்கத்தாலும் மேற்படி முயற்சி நிறைவடைந்துவருகின்றது.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட நிலத்தில் ஒரு அமைதியான சூழ்நிலையில் இந்த நினைவாலயம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஒரு புறத்தில் ஈழப்போரின்போது, முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனித அவலங்களையும், கொலைகளையும், சிறிலங்கா இராணுவத்தினரும் அதன் துணைப்படைகளும், புரிந்த கொடுமைகளையும் கொலைகளையும், மக்கள் பட்ட அவலங்களையும் பல்வேறு சிற்பங்களின் ஊடாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் மேற்படி அவலத்தை தடுக்கும்நோக்குடன் தங்கள் உடல்களையே எரிதழல்களாக்கிய 23 ஈகிகளுக்கும், கற்சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. மையப்பகுதியில் ஒரு உயர்ந்த பாரிய தேவதை பாரிய சிற்பமாக வடித்துநிறுத்தப்பட்டுள்ளது. நிலஅமைப்புக்கள் மிகவும் அழகுற செம்மைப்படுத்தப்பட்டு நாலாபுறமும் மதில்கள் கட்டப்பட்டுள்ளன.
தமிழரின் கட்டடக்கலை வடிவில் வாசலில் பாரிய வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலப்பரப்பில் ஒரு அரும்பொருட்காட்சி நிறுவனமும் அமைக்கப்பட்டு, அவற்றில் முழுக்க முழுக்க ஈழத்தமிழர் போரின் வரலாறுபற்றிய பொருட்களும், மனித அவலங்கள் பற்றிய ஓவியங்களும் இடம்பெற்று இருக்கின்றன.
ஓவியர் புகழேந்தியின் கைவண்ணத்தில் இச்சிற்பங்கள் யாவும் தீட்டப்பட்டு, தலைசிறந்த சிற்பிகளால் மேற்படி நினைவாலயச்சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நினைவாலயத்திற்கு சுமார் ஆறு கோடி இந்திய ரூபாய்கள் செலவாகும் என மதிக்கப்பட்டுள்ளது. தொண்ணூறு வீத வேலைப்பாடுகள் முடிவடைந்துள்ளன.
மேலும் இரண்டு மாதங்களில் மேற்படி நினைவாலயப்பணிகள் நிறைவுபெறவேண்டும். பூரணமாகவும் கச்சிதமாகவும் முடிப்பதற்கு, நிதிப்பற்றாக்குறை இருப்பதாக பழ நெடுமாறன் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
உலகத்தமிழர்கள் தமது பங்களிப்பை இதன்பொருட்டு செய்திருக்கின்றார்கள். இத்திட்டம் சிறப்பாக நிறைவடைய தமிழர்களாகிய நாம் எம்மாலான பங்களிப்பை வழங்கி, வரலாறாக்கும் பணியில் அனைவரும் இணைந்துகொள்வோம்.