fredag 18. november 2011

மக்களே வெல்வர்!

எமது மக்களின் ஆன்ம பலத்தின் முன் எதிரி தோல்வியடைகிறான்.
17 November, 2011 by admin
மக்களே வெல்வர்!

அன்பிகுரிய என்னின மக்களே!

கடந்த 25வருடங்களாக புலம்பெயர் தேசத்தில் தமிழீழ தேச விடுதலைக்காக பணி செய்து வருபவன் எனும் வகையில் எனது சில கருத்துகளை தமிழ் மக்களிடம் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் நேரடியாக உங்கள் முன் கானொளியில் தோன்றி உரையாடவே விரும்பினாலும் சில காரணங்களுக்காக அதைத் தவிர்க்க வேண்டியுள்ளது. மக்களை பிளவு படுத்தாத நஞ்சை விதைக்காத கருத்துகள் பெயரின்றி வந்தாலும் பரவாயில்லை என்பதே என் நிலைப்பாடு. ஏனெனில் நாம் தொடர்ந்து செய்யவேண்டிய பணிகள் இச்சிறு விடயம் மூலம் சங்கடங்களுக்கு உள்ளாவதை நான் விரும்பவில்லை. புலம்பெயர் தேசத்தில் தேசியத்துக்காக உழைப்பவர்களை குழுவாதப்படுத்தி ஓரம்கட்டும் சதிகளின் மத்தியில் நாம் மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் நுண்ணறிவுடனும் செயல்படுவதே தமிழினத்துக்கு நன்மை பயக்கும். எனவே இன்றைய சூழ்நிலையில் முகத்தைவிட கருத்துக்களே போதுமானது என எண்ணுகிறேன். சரியான கருத்துக்கள் மட்டும்தானே எதையும் சரியாக வழிநடத்தும். எனவே எனது தாழ்மையான கருத்துகளை மட்டும் பதிவு செய்வது போதுமானதல்லவா.

இன்று தமிழ் மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்படும் சில தவறான கருத்துகளை, அதை புரிய பிரயத்தனப்படும் மக்களுக்கு தெளிவு படுத்துவது அவசியமாகவுள்ளது! கிட்டத்தட்ட கடந்த 25 வருடங்களாகவே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எனும் அமைப்பு பல்வேறு நாடுகளிலும் உருவாக்கப்பட்டு தேச விடுதலைக்காக பணியாற்றி வருகின்றன. இவை போராட்ட வளர்ச்சியில் தேசியத்தலைவரின் வழிகாட்டலில் காலப்போக்கில் அனைத்துலக செயலகத்தின் ஒருங்கிணைப்பில் பணியை தொடர்ந்தன. எனவே இவ்வமைப்புகள் இயல்பாகவே விடுதலைபோராட்டத்தில் பணி செய்ய விரும்பிய உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான தேசப்பற்றுள்ள தமிழர்களால் அவர்களது அர்ப்பணிப்புகளுடன் தோற்றம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு விடுதலை நோக்கி பயணிப்பதை மக்கள் அறிவார்கள்.

எனவே தமிழ் மக்களை தேசியத்துடன் ஒருங்கிணைக்கும் பணி இவ்வமைப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது அதிகரித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் கடந்த 2009 மே மாதத்தின் பின் இவ்விதம் பணிபுரிந்தவர்களில் சிலர் தோல்வி மனப்பான்மையின் காரணத்தினாலும் மேலும் சிலர் ஒருசில சக்திகளின் தூடுதல்களாலும் ஒதுங்கி சென்று தமது தனிப்பட்ட வாழ்கையை வாழ்கிறார்கள். எந்த ஒரு அமைப்பிலும் சுயநலம் கலந்தவர்களும் , பதவி ஆசையுள்ளவர்களும் போராட்டத்தில் புலிகள் தியாகம் செய்ய, வெற்றி வாகை சூட, புகழின் உச்சிக்கு செல்ல இங்கு அதன் மூலம் தமக்கு செல்வாக்கு தேடிய ஒருசிலரும் இருப்பார்கள் என்பதும் உண்மையே. இப்போது அவ்வாறான சமூக அந்தஸ்து கிடைக்காததால் இவ்வாறானவர்கள் சிலர் ஒதுங்கியும் உள்ளார்கள்.

ஆனால் இது சாதாரண மனித இயல்பே! எனினும் காலப்போக்கில் புதியவர்கள், இளையவர்கள் இணைந்து மேலும் பலம் சேர்த்து மக்களை தேசியத்துடன் ஒன்றிணைத்து முன்னோக்கி செல்ல வேண்டியதுவே காலத்தின் கட்டாயம். மக்கள் இதில் ஆர்வம் காட்டாததும் சோர்ந்து இருப்பதுவும் கூட நான் மக்கள் மீதும் குறிப்பாக இளையவர்கள் மீதும் அன்போடும் அக்கறையோடும் முன்வைக்கும் ஒரு குற்றச்சாட்டே.

ஆயினும் 2009 மே மாதத்தின் பின் வேறு சில விடயங்களும் புலம்பெயர்தேசங்களில் அரங்கேறத் தொடங்கியுள்ளன. சிலர் திட்டமிட்டு மக்கள் பிரிந்துள்ளார்கள், பணியாளர்கள் பிரிந்துள்ளார்கள் எனக்கூரிக்கூறி மக்களை பிரிக்கும் கைங்கரியத்தை கச்சிதமாக செய்து வருகிறார்கள். இதில் முக்கியமாக முன்னர் தேசியத்துடன் பயணித்த ஊடகங்களும் ஒரு சில தனி நபர்களும் தற்போது நிலை மாறி இவ்வாறான கருத்துகளை திட்டமிட்டு விதைத்து விட்டு மக்களை பிளவுபடுத்தி வருகின்றனர்.

35 வருடங்களாக விடுதலைபோராட்டம் நடத்திய மக்கள் இவற்றை எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. எனினும் புலம்பெயந்த சூழலில் இந்த அவசர வாழ்கையில் சில மக்களுக்கு இவற்றை புரிவதில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. நான் மேற்கூறிய, மக்களிடம் பிளவு, அமைப்புகள் பிரிந்து மோதிக்கொள்கின்றன என பிரச்சாரம் செய்யப்படுவதன் பின்னணியை நாம் சற்று ஆராய வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல் புலம்பெயர்தேசத்தில்தலைவரால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மக்கள் பலத்துடன் கூடிய ஒரு சக்தி. இதை ஒரு குழு என யாரும் வகைப்படுத்தமுடியது. இதன் பணியாளர்களில் பெருன்பான்மையானோர் கடந்த 15 தொடக்கம் 25 ஆண்டுகளாக புலம்பெயர்ந்து வாழும் மக்களே!

நாட்டில் இருந்து தற்போது வந்தவர்கள் அல்ல. எனினும், இவ்வமைப்புகளும் ஏன் எந்த அமைப்புமே கொள்கையில் தவறிழைத்தால் பணியாளர்களும் மக்களும் கூட கேள்வி எழுப்பலாம்.
எனவே குழப்பங்கள் தெளிவடைய மக்கள் சிந்தித்து விடை காண வேண்டிய முக்கிய கேள்விகள் சில உள்ளன. இதற்குரிய விடைகளை காண்பது மக்களாகிய உங்களின் பொறுப்பே! விழிப்பான மக்கள் கூட்டமே விடுதலையை வென்றெடுக்கும்! "விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி". எமக்காக மற்றவர்கள் இதை செய்வது தவறாகும். ஏனெனில் ஒவ்வொரு தமிழனுக்கும் விடுதலைக்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். மேலே கூறிய தலைவரால் உருவாக்கப்பட்ட, இனவழிப்புப் போரில் சிதையாத கட்டமைப்பை ஒரு குழுவாக சித்தரிக்க எண்ணுவோர் யார் ?
இவர்கள் எத்தனை பேர்?
இவர்களின் பின்புலம் என்ன?
இவர்கள் எங்கிருந்து இயங்குகிறார்கள்?
இவர்களில் சிலர் எப்போது புலம் பெயர்ந்தார்கள்?
இவர்கள் கூறும் பிரிவின் பெயர் என்ன?
இவர்கள் கூறும் பிரிவுக்கு உரித்துடையவர் யார்?
இவர்களுக்கு இப்பிரிவுகளின் பெயர்களை பாவிக்கும் அதிகாரம் யாரால் வழங்கப்பட்டது?
திடீர் என இவர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் என்ன வேலை?
2009 இன் பின் தப்பி வந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் வந்த நாடுகளில் அமைதியாக இருக்க, எத்தனையோ பேர் பல நாடுகளிலும் ஊரூராயும் அலைய
ஒருசிலர் மட்டும் எவ்விதம் இங்கு வந்தார்கள்?
எவ்விதம் இவர்களால் பகிரங்கமாக நடமாட முடிகிறது?
எந்தெந்த நாடுகளில் குழப்பங்கள் இருக்கின்றன?
இவர்களோடு நிற்கும், ஏற்கனவே இங்கிருந்தவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் என்ன?
அவர்களின் பின்னணி என்ன?
2009 ,2010 ஆண்டுகளில் போராட்டத்துக்காக இவர்கள் என்ன செய்தார்கள்?
இவர்களின் பின்னால் எத்தகைய சக்திகள் நிற்கின்றன?

மேற்கூறிய கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க முடியும். எனினும் விடை தேடும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன். நான் விடையளிப்பது சனநாயகமல்ல. ஏனெனில் போராட்டத்தில் உங்களுக்கும்( மக்களுக்கும்) பொறுப்புள்ளது. குழப்பங்கள் ஏற்படும் சம காலங்களில் அதற்கான தெளிவுகள் தேடுவது கடினமாக இருக்கலாம். எல்லா உண்மைகளையும் புரிந்து கொள்ள காலம் எடுக்கலாம். ஆனால் செயல்பாடுகளில் இருந்தும் கருத்துக்களிளிருந்தும் நீங்கள் உள்நோக்கங்களை கணியுங்கள்.

எமது மக்கள் போராட்ட வரலாற்றை உணர்ந்தவர்கள்! தேசப்பற்றுள்ளவர்கள்! உலகில் ஏனைய நாடுகளில் இவ்வாறு அதிகார மையங்கள் அழிக்கப்பட நாடுகளில் இனங்களின்மத்தியில் எதிரி எவ்வாறு அவ்வினத்தவரையே தமக்கு சார்பாக பயன்படுத்தினான் என்பவற்றையெல்லாம் நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். நடப்பவை ஏன் இப்படி நடக்கின்றன என நிதானமாக நோக்க வேண்டும்? ஆற்றுநீரை வெள்ளமா கொண்டு போய் விடும்? மாவீரருக்கான உணர்வுகளும் இனத்தின் இலட்சியமும் எல்லாத் தமிழரதும் உள்ளத்தில் இருக்கும் வரை தமிழினம் ஏன் குழப்பமடையவேண்டும்?

எமது மக்களின் ஆன்ம பலத்தின் முன் தானே எதிரி மீண்டும் மீண்டும் தோல்வியடைகின்றான்....!

onsdag 9. november 2011