tirsdag 7. desember 2010

ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்காப்பும்

ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்காப்பும் என்ற தலைப்பில் கன்னிமாரா நூலகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.சென்னையிலுள்ள 20 அமைப்புகளும் புதுச்சேரியிலிருந்து 2 அமைப்புகளும் இதில் பங்கேற்றன. தமிழறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் கலந்துகொண்டனர். விழா தொடக்கமாகத் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருபுவனம் ஆத்மநாதன் குழுவினர் பாரதிதாசன் பாடல்களைப் பாடினர்.


தமிழில் 26 கிரந்த எழுத்துகள் சேர்க்கப் படவேண்டும் என்று இரமணசர்மா கூறுவதையும் எதிர்க்கிறோம். கிரந்தத்தில் 5 தமிழ் எழுத்துகள் சேர்க்கப்பட வேண்டும் என்று நா.கணேசன் கூறுவதையும் எதிர்க்கிறோம் . இதைப்பற்றி ஆய்வு செய்வதற்காகவே இக்கருத்தரங்கம் கூடியிருக்கிறது என்று வரவேற்புரையில் முனைவர் பா.இறையரசன் கூறினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.தெய்வசுந்தரம் கணினிக்கு ஏற்ற அறிவியல் மொழி தமிழ் என்பதால் வடமொழியைப் பின்பற்றித் தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையில்லை என்றார். தமிழ் எழுத்துகளை கிரந்த எழுத்தில் சேர்த்துவிட்டால் கிரந்தத்தில் இருந்துதான் தமிழ் வந்தது என்று கூறிவிடுவார்கள்; கிரந்த எழுத்துகள் தமிழில் நுழைந்தாலும் கேடுதான். வரலாற்று ஆவணங்களுக்குக் கிரந்த எழுத்துகள் தேவை என்று சிலர் சொல்லுவதை தமிழறிஞர்கள் முடிவு செய்து கூறவேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்கள் தொடக்க உரை ஆற்றுகையில் கூறினார்.

தமிழர் சமயம் இதழின் ஆசிரியர் தெய்வநாயகம் பேசுகையில் சமற்கிருதமும் கிரந்தமும் இல்லாமல் தமிழால் இயங்க முடியும்; இந்து மதத்தின் பெயரால் அவற்றைத் திணிப்பது தவறு என்று கூறினார். தமிழக முதல்வர் கலைஞர் கிரந்த எழுத்துகளை தமிழில் நுழைய விடமாட்டார் என்று தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் வாழ்த்துரையில் கூறினார். பொறியாளர் வேங்கடேசன் நன்றியுரை கூறினார்.
கருத்தரங்க முதல் அமர்விற்கு கவிஞர் இளவரச அமிழ்தன் வரவேற்றார். கணித்தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஆண்டோபீட்டர் தலைமை ஏற்றுத் தமிழில் கணினிப் பயன்பாடு அதிகமாகி உள்ளது. உத்தமம் அமைப்பின் மூலம் ஒருங்குகுறியில் தமிழ் இடம்பெற தொடர்ந்து பாடுபட்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்.

அறிமுக உரையாற்றிய தமிழ்த் தென்றல் கிரந்த எழுத்துகள் தமிழில் சேர்க்கப்படக் கூடாது என்பதுடன் இதுவரைத் திணிக்கப்பட்டுள்ள ஜ, ஸ, ஹ, முதலிய எழுத்துகளையும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் ஆவணப்படுத்த கிரந்த எழுத்துகள் தேவை இவற்றை தனித்தளத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று முனைவர் இராமகி வலியுறுத்தினார். பொறியாளர் ப.செல்லப்பன் கணினியில் எழுத்துருவிற்கான குறியீடுகள் அமைந்த முறை குறித்து விளக்கினார்.

நண்பகல் உணவிற்குப் பின் இரண்டாம் அமர்வு தொடங்கியது. தலைமை யுரை ஆற்றிய பேராசிரியர் இலக்குவனார் மறைமலை பிறமொழிச் சொற்களைத் தமிழிலேயே ஒலிக்க முடியும் சிறு மாற்றங்கள் இருந்தாலும் ஒலிக்கலாம். கலிஃபோர்னியா என்பதைச் சீன மொழியில் சடிபூர்னியா என்று ஒலிக்கிறார்கள்; உருசிய மொழியில் காமராஜ் என்ற பெயரை காமராச்கி என்றும் பத்மினி என்ற பெயரை பத்மியா என்றும் ஒலித்தார்கள். எனவே கிரந்த எழுத்துகள் தேவையில்லை என்றார். சேலம் கல்லூரி கணினிப் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி தமிழ் வழிக் கல்வியால்தான் தமிழை மீட்டெடுக்க முடியும் தமிழால் அனைத்து அறிவியல் நுட்பங்களையும் கூறமுடியும் என்று விளக்கினார்.

தென்மொழி இதழின் ஆசிரியர் மா.பூங்குன்றன் தமிழுக்கு வர்க்க எழுத்துகள் தேவையில்லை எனவே கிரந்த எழுத்துகளும் தேவையில்லை, வரலாற்று ஆவணங்களை தமிழுக்குக் கொண்டுவரவும் ஒருங்குகுறியை அச்சுத்துறையில் முழுமையாகக் கொண்டுவருவதில் உள்ள தடைகளை நீக்கவும் ஆவன செய்யவேண்டும் என்றார். பாடலாசிரியர் தமிழ்ப்பிரபாகரன் தமிழின் ஒலி அமைப்புகளைக் கெடுக்கக்கூடிய கிரந்த எழுத்துகளை தமிழில் நுழைய விடமாட்டோம் என்று உணர்ச்சியுடன் கூறினார்.

தமிழ்க் காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் கிரந்தம் வேண்டும் என்போர் சொல்லும் காரணங்கள் பொய்யானவை என்று அடுக்கடுக்கான காரணங்களைக் கூறி நிறுவினார்.கிரந்த நிலைப்பாடு குறித்து அவர் வாக்கெடுப்பு எடுத்த பொழுது மூவர் தவிர அனைவரும் கிரந்தம் எந்த வடிவிலும் வேண்டா என்று கையைத்தூக்கி வாக்களித்தனர்.

பின்னர்க் கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1.தமிழக முதல்வர் அறிவித்தவாறு ஒருங்குகுறி தொடர்பான வல்லுநர் குழுவை உடனே நியமிக்க வேண்டும்; அதில் தமிழறிஞர்களையும் சேர்க்க வேண்டும்.
2. தமிழ்ப்பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முதலான அரசு சார் நிறுவனங்களுக்கும் தமிழ்ச்சங்கங்களுக்கும் அரசே உறுப்பினர் கட்டணம் செலுத்தி ஒருங்குகுறி அவையத்தின் உறுப்பினர்களாக ஆக்க வேண்டும்.
3. கிரந்த எழுத்துகளே அயற்சொற்கள் கலப்பிற்கும் தமிழ்மொழிச் சிதைவிற்கும் வழி வகுத்து வருவதால், கிரந்த எழுத்துகளை அடியோடு பாட நூல்களில் இருந்து எடுக்க வேண்டும்.
4. இலங்கையிலும் ஈழத்திலும் கிரந்தம் கலக்காமல் கலைச்சொற்கள் அகராதிகள் வெளியிட்டுள்ளதைப் பின்பற்றித் தமிழ்க் கலைச் சொற்கள் அகராதிகளில் உள்ள கிரந்த எழுத்துகளை நீக்கிப் புதிய பதிப்பு வெளியிடவேண்டும்.
5. இக் கருத்தரங்கத்தின் முடிவிற்கிணங்க கிரந்த எழுத்துகளை ஒருங்குகுறியில் சேர்க்கவே கூடாது.

மாலையில் பேராசிரியர் தெய்வசுந்தரம் தாம் உருவாக்கிய தமிழ்ச் செயலியைத் திரைக்காட்சி மூலம் விளக்கினார். பேராசிரியர் பா.இறையரசன் கனடாவில் இருந்து ‘காப்பிடல்’ என்ற கணினி அறிஞர் அனுப்பிய “ இந்திய அரசே சமற்கிருத – தேவ நாகரி அடிப்படையில் தமிழ் நெடுங்கணக்கை இடம் மாற்றித்தான் ஒருங்குகுறியில் இடஒதுக்கீடு செய்தது; தமிழர்கள் அப்போதே கண்டுபிடித்துச் சரிசெய்யவில்லை” என்பதை விளக்கும் திரைக் காட்சியை விளக்கினார்.

நிறைவு விழாவில் அன்றில் பா.இறை எழிலன் வரவேற்புரை நல்கினார். தமிழ்க் காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தீர்மான உரைகளைப் படித்து விளக்கினார். சிங்கப்பூரில் இருந்த வந்திருந்த தமிழாசிரியர் புலவர் தா.இளங்குமரன் கிரந்த எழுத்துகள் வரவேண்டும் என்று கூறியவர்களுடைய திட்டம் தீட்டிய அறிவு நுட்பத்தைப் பாராட்டுவது நம் வீட்டுக்கு தீ வைத்தவனுடைய அறிவுத் திறனைப் பாராட்டியதாகும்; இது நம்முடைய தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இடையூறு ஆகும் என்று கூறினார்.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் திரு நக்கீரன் தமிழக அரசு கிரந்த எழுத்துகளை வரவிடாது என்றார். தலைமை உரை ஆற்றிய தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் ஜ, ஸ, ஹ முதலிய கிரந்த எழுத்துகளில் இருந்து தமிழ் படிப்படியாக விடுதலைப் பெற்றுள்ளது. காக்ஷி, சாக்ஷி என்பவை காட்சி, சாட்சி என்று வழங்கத் தொடங்கின. மீண்டும் கிரந்த எழுத்துகளுக்கு இடம் தரக்கூடாது வரலாற்று ஆவணங்களை தமிழிலே கொண்டுவர முடியும் முடியாது என்றால் அவற்றைத் தூக்கி எறியுங்கள் என்று தமிழ் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

நிறைவுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் தி.கோ.சீ.இளங்கோவன் அவர்கள், ஸ்ரீ நீக்கப்பட்டு திரு கொண்டுவரப்பட்ட அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து கிரந்த எழுத்துகள் நீக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் மேலும் கிரந்த எழுத்துகள் வர விடமாட்டோம் என்று உறுதி படக் கூறினார். கருததாளர்களுக்கும் நோக்கர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கினார். நன்றி உரை கூறிய மரபுக் கட்டடக்கலை அறிஞர் பெருந்தச்சன் தென்னன், மெய்ம்மன் கலைகளுக்கும் அறிவியல் நூல்களுக்கும் கிரந்த எழுத்துகள் தேவையே இல்லை என்று கூறி நிறைவு செய்தார்.
( செய்தியாளர் : அ.வள்ளி)

torsdag 4. november 2010

கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு

அன்பார்ந்தீர்!
வணக்கம்.
ஒருங்குறி மூலமாக சமற்கிருதத்தை புகுத்தவும், தமிழைச் சிதைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகப் பின்வரும் கருத்துகளைத் தெரிவிக்கிறோம்.

மொழி என்பது ஒலி அடிப்படையிலானது. தமிழ் ஒலிமுறையைக்காக்க வேற்றொலிகள் வராமல் காக்க வேண்டும்.
வடமொழி ஒலிகள் (கிரந்த எழுத்தின் மூலம் ) ஈட்டுரையில் புகுத்தினர். அது தோல்வி அடைந்தது (மு.வ.- இலக்கிய வரலாறு) 5 கிரந்த எழுத்துக்கள் மட்டும் நிலைத்தன். அவற்றையும் பெரிதும் புறக்கணித்து வருகிறோம்.
வட எழுத்துமுறை - கிரந்தம்- வர்க்க எழுத்துகள் இவற்றை அதிகம் கலந்ததனால்தான்
தெலுங்கு, கன்னடம், மலையாளம் தமிழிலிருந்து சிதைவால் தோன்றின.
இனியும் தமிழைச் சிதைக்க விடவேண்டா.
உயிராகிய மொழி எழுத்தாகிய உடலில்தான் தங்கியுள்ளது எனவே எழுத்தைச் சிதைக்கக் கூடாதுஎன செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு மாறாக நாம் சில கிரந்த எழுத்துகளைப் புகுத்தியதால்தான் தமிழ் மொழி பல புதிய மொழிகளாகச் சிதைவுற்றது.
தற்காலத் தமிழ் என்ற பெயரில் அகராதிகளில் சார், டீச்சர் முதலான பல ஆங்கிலச் சொற்கள் தமிழாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பொழுது புகுத்தமுயலும் முறையால் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் சமற்கிருதசொற்களும் புகுந்து, தமிழ் மலையாளம் மொழி 2 என அழைக்கப்படும் வகையில் திரிவுறும். இதனால் பழந்தமிழ் இலக்கிய அழிவும் இன அழிவும் ஏற்படும். ஆதலின் உடனடியாக இந்திய அரசு சார்பில் முன்மொழியப்பட்ட ஒருங்குறி கருத்துருவை திரும்பப் பெறவேண்டும்.

மேலும் செப்பேடு, ஓலைச்சுவடிகளில், வடமொழி சார்ந்த நூல்களில் அச்சிட மொழியியல் குறியீடுகள் போதும் எனப் பிரஞ்சு நாட்டுத்தமிழறிஞர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் கருத்தையும் பார்வைக்கு வைக்கிறோம்.
1 கிரந்த எழுத்துகள் இல்லாமலே இயங்கி வந்த தமிழ் இனியும் அப்படியே தங்கு தடை
இன்றி இயங்கும்.

2 ஐந்து எழுத்தால் ஆன பாடை இல்லை தமிழ்! ஆகவே கிரந்த எழுத்துகள் தமிழுக்குத்
தேவை இல்லை. மொழி இயலார் பயன்படுத்தும் IPA (International Phonetic alphabets)
ஐப் பயன்படுத்தியே அத்தனைத் தமிழ் ஒலிப்புகளையும் எழுதிக்காட்ட இயலும். அப்படி
இருக்க, ஏன் இந்தக் கிரந்த எழுத்துகள்?

3 இன்றைய கணிப்பொறி அறிவியல், தொழில் நுட்பம், ஒருங்குறியீடுகள் ...தமிழ்
எழுத்துகளை எழுதத் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில் கிரந்த
எழுத்துகள் வலிந்து நுழைக்கப் படுவது தமிழின் அறிவியல். தொழில்நுட்பவியல், இலக்கியவியல் வளர்ச்சியைத் தடுக்கும்.

4 கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு வன்புணர்ச்சிக்கு ஈடாகும். தமிழ்த் தாய்
சீர்குலைப்புக்கு ஏதாகும் .

இப்படி இன்னும் அடுக்கிகொண்டே போகலாம். எப்படி இருப்பினும்,
கிரந்த எழுத்துகளின் படையெடுப்பை முறியடிக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு
மட்டும் அல்ல, எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.

ஆகவே, மாண்புமிகு முதல்வர் முத்தமிழரிஞர் அவர்கள் தலைமையில் கூடும் அறிஞர்கள் கூட்டம் கிரந்த எழுத்துத் திணிப்பை முற்றிலும் தடுத்து நிறுத்துமாறு கரம்
குவித்து வேண்டிக்கொள்கிறோம்

இவண்
தமிழ்க் காப்பு அமைப்புகள்

lørdag 9. oktober 2010

உலகவாழ் தமிழர்களே!

கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஸ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல அமெரிக்க எழுத்தாளன் ஜான் ரீட் மாஸ்க்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோப்பர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள்.

வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ழான் பவுன் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியனான ஹெரால்ட் பின்ரர்.

படைப்பாளிகள்,கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது என்று நிரூபித்தவர்கள்.

சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தமது உயிராபத்து கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலை செய்தும், பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும் சரணடைந்தவர்களை சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்கள பயங்கரவாத அரசு.

யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது. நடைபெற்ற இந்த இனப்படுகொலை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகிறார்கள்.

தமிழர்களின் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறி சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தர செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியற் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில், கலை, இலக்கியம், விளையாட்டு கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியை சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.

சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாக கொழும்பில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன் இன்னொரு முனையாகவே 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நோக்கப்படுகின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களைப் பங்குபற்ற வைப்பதன் மூலம் அனைத்துத் தமிழர்களும் தனது பக்கமே என்ற தோற்றத்தினை அரசு ஏற்படுத்த முயல்கின்றது. இதற்கு நாம் பலியாகக்கூடாது.

சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களை கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மகாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால் சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.

சிறிலங்கா பயங்கரவாத அரசினால் உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கு அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை.

இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் இரத்தச் சுவடுகளின் மீது, எமது பெண்களதும், பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீது நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைப் எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகள், கலைஞர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.

நீதியின்மேல் பசிதாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ் எழுத்தாளர் கழகம்

mandag 2. august 2010

வடக்கு கிழக்கு பிரதேசங்களில்

இராணுவமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர் பாரம்பரிய தொன்மைகளையம் விழுமியங்களையும் அழிக்கும் அல்லது முக்கியத்துவத்தை குறைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் துப்பாக்கிகளின் மிரட்டலோடு செவ்வனே செய்து வருகிறது. சமய சின்னங்களையும் அதுபற்றிய சிந்தனைகளையும் அவ் சமயம் சாராத இன்னோர் இனத்தின் மேல் திணித்தல் என்பது அவ்வினத்தின் வீரியத்தை இல்லாது செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையே.

புத்தரின் நெறி எவ்வாறாயினும் சிறிலங்காவைப் பொறுத்தவரை புத்தர் என்பது பேரினிவாதத்தின் குறியீடாக்கப்பட்டுள்ளது. சிங்கள ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள அரசியல் புத்தர் சார்ந்ததாகவே காணப்படுகிறது. இனவன்முறைகளை ஆதரிப்பவர்களாயும் சிறுபான்மையினரின் உரிமைகளை மறுப்பவர்களாயும் பெளத்த பீடாதிபதிகளே முக்கியமாக திகழ்வது சிறிலங்காவில் புத்தரின் அரசியல் செல்வாக்கிற்கு உதாரணம்.

வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் நிறுவப்படும் புத்தர் சிலைகளுக்கு ஆயுதமேந்திய படையினர் பாதுகாப்பு கொடுப்பதென்பது சிங்கள பெளத்தத்தை தமிழ் மக்கள் மீது திணித்தலின்றி வேறென்ன!!!!!

தமிழர் தாயகப்பிரதேசங்களில் புத்தரின் அதிகரிக்கும் வருகையானது நீண்ட காலத்தில் தமிழர் தொன்மை அழிக்கப்பட்டு தமிழர் சமய நெறிகள் சிதைக்கப்பட்டு கட்டுக்கோப்பற்ற தமிழர் சமுதாயத்தை உருவாக்கி அடிமைப்படுத்தப்படும் அரசியல் நெறியை கொண்டுவருவதற்கான ஏற்பாடாகும். ஆயுத பலத்தோடு சமயம் திணிக்கப்படுவது என்பது வெறுமனே அரசியலே தவிர வேறெந்த காரணங்களும் இருக்க முடியாது.

இன்றைய காலகட்டத்தில் பெளத்தமத விசேட தினங்களுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் சிங்கள மாவட்டங்களை விட முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெளி அலங்காரங்கள், விருந்துபசாரங்கள் போன்றவற்றினூடாக சிங்களர்களுடைய கலாச்சாரத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாக உள்ளோம் போன்றதான பிரமையை உருவாக்கி, தமிழருக்கு மறுக்கப்படும் உரிமைகளை பற்றி தமிழர் சிந்திப்பதை மழுங்கடிக்கும் உளவியல் உத்தியை பயன்படுத்துகிறார்கள். இதிலே கணிசமான அளவு வெற்றி கண்டுவிட்டார்கள் என்று கூட சொல்லலாம்.

சிங்கள நிகழ்வுகளை சிங்கள பிதேசங்களில் கண்டுகழிப்பது அல்லது கொண்டாடுவதென்பது வித்தியாசமானது. ஆனால் தமிழர் தாயகப் பிதேசங்களில் எத்தனையோ ஆயிரம் உயிர்களை காவு கொடுத்துவிட்டு பல கோடி சொத்துகளை இழந்து விட்டு நிற்கும் மக்களிடையே புத்தரின் களியாட்ட தினங்களை விமர்சையாக கொண்டாடுதலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தல் என்பதும் தமிழர் தமது இருப்புகளை இழந்து வருகின்றனர் என்பது தான்.

இந்த சமய அரசியல்களை நாம் தெளிவாக புரிந்து நடக்க வேண்டும். திணிக்கப்படும் புத்தரிலிருந்து தமிழர் விலகி நடக்க வேண்டும். தமிழர் கலாச்சாரமும் நெறிகளும் மிகவும் தொன்மையானது என்பதையும் எப்படியும் வாழலாம் என்றில்லாது இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சமூக வரன்முறை கொண்ட இனம் தமிழர் இனம் என்பதையும் இன்றைய இளைஞர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் சமுதாயப் பிழைகளினூடாக பெளத்த அரசியல் உள் நுழைந்து எமது விழுமியங்களை சிதைப்பதற்கு மிக ஆவலோடு இருப்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

எமது பிரதேசங்களை எமது விழுமியங்களை தொலைக்காது கட்டியெழுப்புவோம்...பெளத்தத்தின் கழியாட்ட அரசியல் மாயைக்குள் தமிழர் விழுமியங்களை தொலைக்காது தடுப்பதற்கு, இன்றைய‌ பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் எடுக்கும் கண்டிப்பான சில கட்டுப்பாடுகளே உதவும்.

- மா.குருபரன் ( webkuru@gmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )