கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை
வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஸ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல அமெரிக்க எழுத்தாளன் ஜான் ரீட் மாஸ்க்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோப்பர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள்.
வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ழான் பவுன் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியனான ஹெரால்ட் பின்ரர்.
படைப்பாளிகள்,கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது என்று நிரூபித்தவர்கள்.
சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தமது உயிராபத்து கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.
தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலை செய்தும், பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும் சரணடைந்தவர்களை சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்கள பயங்கரவாத அரசு.
யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது. நடைபெற்ற இந்த இனப்படுகொலை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகிறார்கள்.
தமிழர்களின் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறி சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தர செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியற் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில், கலை, இலக்கியம், விளையாட்டு கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியை சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.
சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாக கொழும்பில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன் இன்னொரு முனையாகவே 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நோக்கப்படுகின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களைப் பங்குபற்ற வைப்பதன் மூலம் அனைத்துத் தமிழர்களும் தனது பக்கமே என்ற தோற்றத்தினை அரசு ஏற்படுத்த முயல்கின்றது. இதற்கு நாம் பலியாகக்கூடாது.
சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களை கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மகாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால் சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.
சிறிலங்கா பயங்கரவாத அரசினால் உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கு அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை.
இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் இரத்தச் சுவடுகளின் மீது, எமது பெண்களதும், பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீது நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைப் எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகள், கலைஞர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.
நீதியின்மேல் பசிதாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.
இப்படிக்கு,
தமிழ் எழுத்தாளர் கழகம்