torsdag 8. september 2011

'கிரீஸ் பூதங்கள்'

அன்புள்ள அனைத்துலக தமிழீழ மக்களே

கடந்த ஒரு மாத காலமாக 'கிரீஸ் பூதங்கள்'; என்று எமது மக்களால் அழைக்கப்படும் ஒரு வகையான மர்ம மனிதர்களின் நடமாட்டம் சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அதிகரித்திருக்கிறது. தமது அடையாளத்தை மறைப்பதற்காக ஒருவகை கறுப்பு களியை உடலெங்கும் பூசியுள்ளதாலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்குவதாலும் அங்குள்ள மக்கள் 'கிரீஸ் பூதங்கள்' என்று அந்த மர்ம மனிதர்களை அழைக்கிறார்கள். இதில் என்ன துயரம் எனில் இந்த மர்ம மனிதர்களின் இலக்கு சிறுபான்மை இனப்பெண்களேயாகும்.

இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இதுவரை தாக்குதல் நடந்த இடங்களில் எந்த திருட்டும் நடக்கவில்லை, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. பெண்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிடூம் அளவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்களது முலைப்பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பல இடங்களில் பதிவாகியிருக்கிறது. இந்த மர்ம மனிதர்களை பொதுமக்கள் சிறைப்பிடிக்க முற்பட்டபோது அவர்களை சிறீலங்கா அரசின் இராணுவம் காப்பாற்றி தம்மோடு அழைத்து செல்வது தினமும் நடந்து வருகிறது.


சிறீலங்கா அதிபர் இன்று மே 18 இல் நடத்திய அழித்தொழிப்பின் விளைவாக சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளார். அவர் அதிலிருந்து விடுபடுவதற்காக ஒரு ஜோதிடரின் பரிகாரமாகவே சிறுபான்மை இனப்பெண்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள் என்பது அங்குள்ள ஊடகவியலாளர்களின், பெரும்பான்மை மக்களின் கருத்து. சில சிங்கள ஊடகவியலாளர்கள், அதிபரது குடும்ப உறுப்பினர்களை, அவரது கட்சி அங்கத்தவர்களை ஆதாரம் காட்டி இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக இதை ஊடகங்களில் முன்வைக்க முடியாத நிலை. முதற்காரணம் அச்சம். அதற்கான காரணத்தை உலகிலுள்ள ஊடக அமைப்புக்களை தொடர்பு கொண்டு கேட்டால் அங்குள்ள கருத்து சுதந்திரத்தை உங்களுக்கு அவர்கள் கதைகளாகச் சொல்லக்கூடும்.

இது ஒரு ஆய்வாளரின் கருத்து. இந்த வரிகள் இதன் மூலத்தையும் பின்னணியையும் நுண்ணரசியலையும் உணரபோதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சிறீலங்கா அரசின் இனவாதம் என்பது அதன் மத அடிப்படைகளிலும் அதன் விளைவான பிற்போக்கு தனங்களிலும் இருந்து தோற்றம் பெற்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று நான்கு வகையான மதங்கள் அந்நாட்டில் உள்ள மக்களால் பின்றபற்றப்படுகிறபோதும் பௌத்தபேரினவாத சிந்தனையை மையப்படுத்தியே அதன் அரசியலமைப்பும் ஆட்சியதிகாரமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

எல்லா அரசியல் நிகழ்வுகளுக்கும் நாட்குறித்த சிங்கள பௌத்த பிக்குகள் இனப்படுகொலை- போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்புவதற்கும் 'மகாவம்ச மனநிலை' யோடு தமிழ்ப்பெண்களின் இரத்தபலியைக் கேட்கிறார்கள். தமிழர்களின் படுகொலைகளுக்கு எந்த பிராந்திய - பூகோள அரசியல் காரணமாகியதோ அதே காரணம் இன்று சிங்கள அரசனையும் கழுவிலேற்றக் காத்திருக்கிறது. அனைத்து சிறுபான்மை இனப்பெண்களின் முலைகளை அறுத்தெறிந்தாலும் அவர் தப்பப் போவதில்லை. அது வேறு கதை. ஆனால் அதற்குள் சிறுபான்மை பெண்களின் மீது வன்முறையை செலுத்தி ஒரு இனச்சுத்திகரிப்புக்கான வேலைகளை பல்வேறு வழிகளில் தொடங்கவிட்டது சிங்கள அரசு. அதன் மிக அண்மைய வடிவம்தான் இந்த 'கிரீஸ் மனிதர்கள்'.

'கிரீஸ் பூதங்கள் : இனச்சுத்திகரிப்பின் நுண்மையான வடிவம்'


--
“வீழ்வது அவமானமல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்பதுதான் பெருத்த அவமானம்”.