søndag 10. juli 2011
சேவியர் ஐயா அவர்களே!
சேவியர் ஐயா அவர்களே!
நோர்வேயிலிருந்து கோகுலன் எழுதிக்கொள்வது... உங்களை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் விட்டிருந்தேன். நீங்கள் தொடர்பு கொள்ளவில்லை. காரணம் விளங்கவில்லை.
ஆனால் youtube இல் இன்று உங்கள் உரை கேட்டேன். மேலே உள்ள லிங்க் இல் உள்ளது. உரையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நீங்கள் கருத்து ரீதியாக தலைகீழாக மாறிவிட்டதை உணர்ந்தேன்.
சிங்கள அடக்குமுறைக்கெதிராக 30 வருடங்களாக போராடிய உயிர்நீத்த 30000 இற்கும் மேலான போராளிகளையும் 2 இலட்சம் மக்களையும் கொச்சைபடுத்துவதாக உங்கள் கருத்துகள் அமைந்திருந்தன.
"பெரிய சக்திகளுடன் போராடி வெல்லமுடியாது அவர்களுடன் சேர்ந்து அவர்களுடன் பேசி கதைத்து அவர்கள் தரும் சலுகைகளை வாங்கி அடிமைகளாக வாழுமாறு" நீங்கள் மக்களுக்கு பரிந்துரைக்கின்றீர்கள். 50 வருடங்களுக்கு முன் தந்தை செல்வா தலைமையில் அறவழியில் போராடிய உங்கள் தலைமுறைக்கு கிடைத்தது என்ன? அடியும் உதையும் மட்டும் தான். அந்தத்தலைமுறையால் ஏதாவது உரிமைகளை பெற முடிந்ததா? அறவழிப் போராட்டம் தோற்றதால் தானே ஆயுதப்போராட்டம் உருவானது...இப்போராட்டத்தை ஆதரித்து தானே நீங்கள் விடுதலை புலிகளின் புலம் பெயர் மேடைகளில் எல்லாம் முழங்கினீர்கள். அப்போதெல்லாம் இல்லாத இந்த ஞானம் திடீரென்று இப்போது எங்கிருந்து வந்தது? மேடைகள் கிடைத்தால், செல்வாக்கு இருக்கும், பலம் இருக்கும் இடத்தில் அதற்கேற்றால் போல் கதைப்பதுதான் உங்கள் கொள்கையா?
எனக்கு விளங்கவில்லை.
ஆயுதப்போராட்டம் பற்றி இழிவாக நீங்கள் கூறும் கருத்துகள் தோல்விமனப்பான்மையால் வந்தது என்பதே என்கருத்து. போராட்டம் ஒரு போதும் தோல்வியடையவில்லை. ஆனால் நீங்கள் கூறும் சக்திகள் தான் தொல்விகண்டுள்ளன. இதை நான் விளக்குகிறேன்... 20 நாடுகளின் துணையுடன் 4 வல்லரசுகளின் துணையுடன் இலங்கை போரிட்டது. நாம் தனித்து நின்று போரிட்டோம். எமது பக்கம் நியாயமும் தர்மமும் மட்டும் தான் இருந்தன. அத்துடன் கொள்கையில் உறுதியான இனப்பற்றுள்ள வீரமுள்ள மானமுள்ள மக்கள் நின்றார்கள். It was a unequel war என cannel4 தொலைக்காட்சியே கூறுகிறது. 4 இலட்சம் மக்களை 70,000 மக்கள் மட்டுமே எனக்கூறி 2 km பரப்பளவுக்குள் கொண்டுவந்து அதை பாதுகாப்பு வலயம் எனவும் கூறி கொன்றோளித்தது யார்? நான்கு இலட்சம் மக்கள் இருந்த இடத்தில் எழுபதாயிரம் எனக்கூறி குறைந்த உணவை அனுப்பி பட்டினி போட்டுக்கொன்றது யார்? மருந்துகளை தடை செய்தது யார்?போசுபரசுகுண்டுகளை மக்கள் மீது போட்டது யார்? விமானத்திலிருந்து மக்கள் மீது குண்டுகளை போட்டு கொன்றது யார்? உலகமெங்கும் மக்கள் ரோட்டில் நின்று யுத்தநிறுத்தம் கொண்டு வர போராடியபோது அதை கொண்டு வராமல் விட்டது யார்? நீங்களும் எங்களுடன் நின்று போரடிநீர்களே யார் திரும்பிப்பார்த்தார்கள்? மனிதகுலத்திட்கேதிரான மானிட நேயத்திட்கெதிரான குற்றங்களை புரிந்தது யார்? உலகமனட்சாட்சியின் முன் சமாதானமாக பேசி தீர்வு தேடிய எம்மை ஏமாற்றியது யார்? இலங்கையும் சர்வதேசசமூகம் எனக்கூறிய நாடுகளும் தான். இதை உங்களால் மறுக்க முடியுமா?
இவற்றையெல்லாம் எதிர்த்து நீதி கேட்டு பட்டினிக்கும் சாவுக்கும் அடிபணியாது அநீதிக்கும் அராஜகத்துக்கும் அடிபணியாது கொள்கைக்காக எமது இனப்போராளிகள் மடிந்தனர். எம்மினமா தோற்றது?. அல்லது மனிதகுலத்திகே இழிவான அநாகரிகமான, பேடித்தனமான, சனத்தின், ஒரு இனத்தின் அபிலாசைகளை , உரிமைகளை மதிக்காத நீங்கள் ஒட்டி உறவாட அழைக்கும் சிங்கள அரசும் சேர்ந்து நின்ற அரசுக்களுமா அல்லது நாமா தோற்றோம்? யார் தோற்றார்கள்? உங்கள் மனட்சாட்சியை தொட்டு கூறுங்கள்.
வென்றது தமிழர்கள் மட்டுமில்ல...ஒட்டுமொத்த மனிதகுலமும், அடக்கப்படுகிற எல்லா இனங்களுமே வென்றன... ஏனெனில் இந்த இருபதாம் நூற்றாண்டில் நவீன நாகரிக உலகில் சாட்சிகளின்ரி ஒறினத்தை கொன்று ஒழிக்கலாம் என நினைப்பது அதை நடத்துவது மனிதகுலத்திட்கேதிரான மாபெரும் குற்றமும் துரோகமும் ஆகும். ஆயுதத்பலத்தாலும் அராஜகத்தாலும் 20 இற்கும் மேற்பட்ட அரசுகள் சேர்ந்து போரிட்டாலும் அநீதிக்கெதிராக தர்மத்தின் பக்கம் நின்று போரிட்ட இனமே வென்றது.
கொள்கை ரீதியான பிணக்கு ஒன்று. ஒரு புறத்தில் உலக குத்துசண்டை வீரன் ஒருவன். அவனுக்கு ஆதரவாக பலர். ஆனால் அவன் நிற்பது அநீதியின் பக்கம். ஆனலும் அவனை எதிர்க்க எல்லோரும் தயங்குகிறார்கள். பயத்தால் நடுங்குகிறார்கள். எதிர்க்க யாரும் இல்லை. ஒரு சாதாரண சிறுவன் மட்டும் எழுந்து களத்துக்கு வருகிறான். அவனுக்கு தன் பலம் தெரியாததல்ல இது சமச்சீர் அற்ற யுத்தம் என அவன் அறியாதவனல்ல.... ஆனால் அவன் முன்வராவிட்டால் நீதி செத்துவிடும் எனும் நிலை. அதர்மம் வென்று விடும் எனும் நிலை. அச்சமற்ற அச் சிறுவனின் கால் களத்தில் பதிந்தது. அக்கணமே நீதி தேவதை பிழைத்துக் கொண்டாள். தர்மம் வென்றுவிட்டது. மனிதகுலம் சிலிர்த்து நிமிர்ந்தது... குத்துச்சண்டை வீரன் பலரை வென்றிருந்தாலும் மிகப்பலம் வாய்ந்தவனாக இருந்தாலும் சாதாரண ஒரு சிறுவனின் மனோபலத்தின் முன்னும் நீதி,நியாயம்,தர்மம், மனிதநேயம் , தன்னினம் மீது அவன் கொண்ட பற்றின் முன்னும் தோற்றுப்போனான். அவனை ஆதரித்தவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.
இதை இன்று உலகம் உணர்கிறது. மனிதகுலவரலாற்றில் தமிழினம், விடுதலை புலிகள் தலைமையில் நிகழ்த்தியது மனிதகுலதிட்கான மனிதநேயதிட்கான மனித உரிமைகளுக்கான தர்மயுத்தமாக வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. அதை நிகழ்த்தியவர்கள் எம்மினப்போராளிகள்.
"விடுதலைபுலிகளைப்போல் ஓர் உன்னதமான விடுதலை இயக்கத்தை ஜீரநிக்கக்கூடிய தகுதி இந்த உலகத்திற்கு இருக்கவில்லை" என ஒரு சிங்கள குருவானவர், விரிவுரையாளர் குறிப்பிட்டுள்ளார். ...ஆகவே நீங்கள் தெரிவிப்பது தோல்விமனப்பன்மையில் அடிமை மனப்பான்மையில் எழுந்த கருத்துகளாகவே எனக்குப்படுகிறது. இயேசுவை வணங்கும் நீங்கள் மக்களை காக்க அநீதிகேதிராக இயேசு போராடினார் என போதிக்கும் நீங்கள் அநீதிகேதிராக குரல் எழுப்பாது அடிமைத்தனத்தை மக்களுக்கு ஊட்டுவது எந்தவிதத்தில் சரியானது என நினைத்துப் பாருங்கள்.
இரண்டு இலட்சம் இராணுவம் தமிழர் பகுதிகளில் இருப்பதாகவும் அவர்கள் தம் பாட்டில் மக்களுக்கு தீங்கு செய்யாது வாழ்வதாகவும் கூறுகிறீர்கள். எமது மக்களை அச்சுறுத்தி பெண்களை சிறுமிகள் பலவந்தப்படுத்தி இளைஞர்களை அச்சுறுத்தும் படுகொலை செய்யும் இராணுவத்தை நீங்கள் சாதுக்கள் என அத்தாட்சி கொடுக்கிறீர்கள். உலகமே இனப்படுகொலை புரிந்தவர்கள் எனக்கூறும் இராணுவத்தை கோதாபய கூட இந்தளவுக்கு புகழமாட்டான். அவர்கள் தங்கள் பாட்டில் இருக்கிரார்களேன்றால் சிங்களப்பகுதிகளில் இருக்கலாமல்லவா? ஏன் தமிழர் நிலத்தில் நிற்க வேண்டும்?
உங்களுக்கு இன்னுமொரு கருத்தை கூற விரும்புகிறேன். ஆயுதப்போராட்டம் தொடங்கும் என்று உங்களுக்கு யார் கூறியது? அதை காலம் தீர்மானிக்கட்டும். ஆனால் இன்று எம்மை உலகம் திரும்பிப்பார்க்கவைத்தது ஆயுதபோரட்டம்தான். இனஅழிப்பு நடைபெறுகிறது என நிரூபித்தது ஆதப்போராடம்தான். இப்போது எமக்கு ஆயுதப்போராட்டம் தேவையில்லை. ஆதப்போராட்டதின்மூலம் நாம் எதை சதிக்கவேண்டுமோ அதை சாதித்து விட்டோம்.
முள்ளிவாய்க்கால் போரின்மூலம் எவரும் இனி எம்மினத்தை இவ்வுலகில் பாதுகாக்கமாட்டார்கள், எமது மக்களுக்கு பாதுகாப்பு தனியரசு தான் என்பதை நிரூபித்துவிட்டோம். உலகம் அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் எம்முன் உள்ள பணி. இதைச்செய்ய ஆயுதம் தேவையில்லை.
மிகப்பெரிய இனப்படுகொலை நடந்தும் நீங்கள் கூறும் சிங்களவர்களும் அரசுகளும் மூடிமறைக்கவே முயற்சிதன முயற்சிக்கின்றன. இதற்கெதிராக நாம் ஆயுதத்ப்போராட்டமா செய்தோம்? சனநாயக முறையில் போராடித்தான் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை வெளியில் கொண்டு வருகிறோம். இதுதான் போராட்டத்தின் அடுத்தகட்டம்.
ஆனால் இன்றுள்ள பிரச்சனை என்னவெனில் இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ளவைக்க எமது புலம்பெயர் மக்கள் செய்யும் பணியை செய்யவிடாது இனவழிப்பு நடந்ததை மறைக்க பல சக்திகள், எம்மை அழிக்க துணைநின்ற அதே சக்திகள் முயற்சி செய்கின்றன. எமது போராட்டம் இனவழிபுக்கேதிரான போராட்டம் எனும் கருத்தை மறைக்கவும் அவர்களின் அடிமைக்கருத்துகளை எம்மவரிடையே விதைக்கவும் அவர்கள் செய்த மனிதகுலதிட்கேதிரான
குற்றங்களில் இருந்து தப்பவும் உங்களைப்போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ துணை செய்கின்றனர். 60 வருட போராட்டத்தின் இழப்புகளின் தியாகங்களின் பெறுபேறுகளை இழக்க வைக்கும் செயல்கள் இவை என நீங்கள் உணரவில்லையா?
உங்களிடம் இன்னுமொரு கேள்வி? பெரியசக்திகளுடன் சண்டித்தனம் செய்யக்கூடாது சேர்ந்து கதைத்து எல்லாம் பெறலாம் எனக்கூறும் நீங்கள் ஏன் எமது புலம் பெயர்ந்த மக்களிடம் பணத்தை உதவியை எதிர்பார்கிறீர்கள்? சிங்களவர்களுடனும் ஏனைய சக்திகளுடனும் கதைத்து எமது மக்களுக்கு உதவிகளை நிவாரணங்களை பெற்றுக்காட்டலாமே. இதைகூட செய்விக்க முடியாத நீங்கள் எவ்வாறு சிங்களவருடனும் அவனுக்கு உதவிய சக்திகளுடனும் கூடிக்குலவி, பேசி, சிரித்து எமது அரசியல் உரிமைகளை பெற்றுதருவீர்கள் எனக் கூறுவீர்கள்.
எமது மக்களுக்கு உதவி செய்யக்கூடாது என்பதற்காக நான் இதை கூறவில்லை வாதத்திற்காகவே கூறுகிறேன். உங்கள் கருத்தில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டவே கூறுகிறேன். எமது மக்களுக்கு சிங்களவர்களோ மற்றவர்களோ உதவப்போவதில்லை என்பது எனக்கு தெரியும். இன்றைய நிலையில் நாம் தான் எமது மக்களுக்கு உதவமுடியும். ஆனால் நீங்கள் கூறும் கருத்துகள் எமது மக்களின் அவலத்தை கூறி அந்த அவலத்தின் மூலம் பரிதாபதிட்குரிய மக்களாக மாற்றி உரிமைகளுக்காக போராடாத இனமாக மாற்றி நிரந்தரமாக அவர்களை அடிமைகளாக ஆக்கும் திட்டத்துக்கு துணை போவதாகவுள்ளது.
நாம் இங்கு போராடினால் அங்கு மக்கள் கஷ்டப்படுவர்களாம். இதுவும் உங்கள் முரண்பாடான கருத்துகளில் ஒன்று. சிங்களவர்களுடன் எல்லாவற்றையும் மறந்து பேசி சிரித்து விளையாடி கேட்டால் கிடைக்கும் எனும் நீங்களே நாம் இங்கிருந்து கேட்டால் எமதுமக்களை அவர்கள் அழித்துவிடுவார்கள் என மிரட்டுகிறீர்கள். அத்தகைய கொடுமைக்காரர்களுடன் உறவு வைக்குமாறு கூறுகிறீர்கள். இது என்ன நியாயம்?
நீங்கள் நேர்மையாக எனது கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் பதில் தருவீர்கள் என நம்புகிறேன். ஒற்றுமை, ஜனநாயகம், பேச்சுவார்த்தை (ஏனெனில் எமை அழிப்பவனுடையே பேசி வெல்லலாம் என நீங்கள் போதிப்பதால்) என்பவற்றில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் நீங்கள் எனது கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதிலளிப்பீர்கள்.
இப்படிக்கு
உண்மையுள்ள
கோகுலன்
Abonner på:
Innlegg (Atom)